Thursday, July 3, 2014

வங்கிப் பணிகள் - அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் ஆனாலும் சிரமங்களை சந்திக்கும் வாடிக்கையாளர்

வங்கிப் பணிகள் - அதி நவீன 
தொழில்நுட்ப வசதிகள்
ஆனாலும் 
சிரமங்களை சந்திக்கும் வாடிக்கையாளர்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோர் பேங்கிங் என எந்த கிளைக்கும் அதே வங்கியின் மற்ற கிளைகளிலிருந்து பணம் செலுத்தலாம், ஏடிஎம் கார்டு எந்த வங்கியின் இயந்திரத்திலும் பயன்படுத்தலாம், கைபேசியிலிருந்து வங்கி கணக்கை இயக்கலாம்- ஏடிஎம் இயந்திரம் வழியாகவே பணப்பரிமாற்றம், பல யுடிலிட்டி பில்கள் இணையம் வழியாக செலுத்தும் வசதி- நெட் பேங்கிங் என தொழில் நுட்ப செளகர்யங்கள் பல அதிகரித்துள்ள போதிலும், சாதாரணமாக வங்கியின் வாடிக்கையாளர் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு அனைவருக்கும் சுமுகமாக விரைவாக தீர்வு கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான் மிஞ்சுகிறது.
நான் பணியாற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர சம்பளம் எனது பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் பிரதி மாதம் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் ஓரிரு மாதங்கள் முன்பாக எனது ஏடிஎம் கார்டில் லேமினேஷன் உரிந்து போனதால், அவ்வப்போது சில ஏடிஎம் இயந்திரங்களில் அந்த கார்டை மதிக்காமல் இயந்திரம் திரும்பத் துப்பும் நிலை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட வங்கியின் எனது கணக்கு உள்ள தல்லாகுளம் கிளையை அணுகி மாற்றுக் கார்டு வேண்டும் என கேட்ட போது- என்னை எதிர்கொண்ட (வடமாநில - அதாவது தமிழ் புரிவதில், பேசுவதில் சிரமம் உள்ள) அலுவலர், வங்கி மேலாளர் அறையின் வெளிப்புற கண்ணாடியில் உள்ள ஸ்டிக்கரை காண்பித்து அதில் உள்ள நம்பர்களில் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் என்றார். (வாடிக்கையாளர் சேவை மைய எண்கள் அவை)
அதில் ஒரு நம்பரை எனது கைபேசியிலிருந்து அழைத்தபோது ஹிந்தியில் சம்சாரிக்க 1 அழுத்துங்கள், ஆங்கிலத்தில் செப்ப 2 அழுத்துங்கள், தமிழில் பேச 3 அழுத்துங்கள் என்கிற வகையிலான பதிவு செய்யப்பட்ட குரல் கேட்கவும்- இது கேட்கும் ஒவ்வொரு கேள்விக்காக பதில் அளிக்க நமது அலுவலகம் சென்று விடுவோம்ஏற்கனவே ஒரு மணி நேரம் மட்டுமே அவகாசம் கேட்டு வந்திருக்கிறோம் என எனது இருப்பிடம் வந்து- பின்னர் அதே எண்ணை தொடர்பு கொண்டு அது சொல்லியவற்றையெல்லாம் கேட்டபின், வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய உதவியாளருடன் தொடர்பு கொள்ளும் பாக்கியம், சில பல இசை மெட்டுக்களை கேட்டு காத்திருந்தவுடன் கிடைத்தது. அவரும் எனது கணக்கு எண், பிறந்த தேதி போன்ற சில விபரங்களை கேட்டு பேசுவது சம்மந்தப்பட்ட கணக்கின் வாடிக்கையாளர் என உறுதி செய்தபின்- உங்கள் ஏடிஎம் கார்டு செயலிழக்கச் செய்யப்படுகிறதுஇனி நீங்கள் உங்கள் வங்கி கிளையை தொடர்பு கொண்டு புதிய கார்டுக்கான மனுச் செய்யவும் என்றார்.

வங்கிக்கும் எங்கள் அலுவலகத்திற்கும் உள்ள தூரம் சுமார் 8 கி.மீ, இரு சக்கர வாகனத்தில் பல நெருக்கடி, பல சிக்னல்கள் கடந்து சென்று வந்த அலுப்பில்- இவற்றை நம்மை எதிர் கொண்ட வங்கி அலுவலரே செய்திருக்கலாமே, ஏன் இவ்வாறு அரை, குறை தகவலுடன் நம்மை அலையவிட்டார் என தோன்றியது.
மறுநாள் வங்கி கிளைக்குச் சென்று மாற்று ஏடிஎம் கார்டிற்கான விண்ணப்ப படிவம் நிரப்பி, முகவரி மற்றும் அடையாளச் சான்றாக ஓட்டுனர் உரிம நகலையும் இணைத்து மனுச் செய்தவுடன் (14/06/14) ஒரு வாரத்தில் கார்டு வந்துவிடும் என்றார்கள்.  3 வாரங்களுக்கு மேலாக வராமல் இருக்கவே, இணையத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் புகார் செல் என்பது போன்று ஏதாவது இருக்கிறதா என தேடிய போது "8008202020" என்ற எண்ணிற்கு "UNHAPPY" என குறுஞ்செய்தி அனுப்பினால் வங்கியிலிருந்து நம்மை தொடர்பு கொள்வார்கள் என்பதை அறிந்து அதே போல் 4 தினங்களுக்கு முன்பாக குறுஞ்செய்தி அனுப்பினேன்.
மறுதினம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை மைய உதவியாளர் எனது புகாரை பதிவு செய்து கொள்வதாகவும், சம்மந்தப்பட்ட வங்கி கிளைக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்து முடித்துக் கொண்டார்.
வங்கியில் கணக்கு துவக்கும் போது நமது கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, போன்றவை கொடுக்கிறோமே, மற்ற நேரங்களில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் இது போல் புகார் பதிவு வந்த நபர்களுக்காவது, உங்கள் கோரிக்கை பாிசீலனையில் உள்ளது இன்ன தேதியில் கிடைக்கும் என்பது போன்ற குறுஞ்செய்தியை எதிர்பார்த்தது என் தவறு.
மீண்டும் நேற்று (02/07/14)  "8008202020" என்ற எண்ணிற்கு "UNHAPPY" என குறுஞ்செய்தி அனுப்பினேன்இன்று வாடிக்கையாளர் சேவை மைய உதவியாளர் என்னை தொடர்பு கொண்டவுடனேயே எனது தரப்பை புலம்பவும், அவர் மதுரையின் முதுநிலை வங்கி மேலாளர் ஒருவரின் எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளச் சொன்னார்நான் குறிப்பிட்ட மேலாளரை தொடர்பு கொண்டவுடன் எனது கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டுக் கொண்டவுடன் எனது கணக்கு எண் போன்ற விபரங்களை கேட்டுக் கொண்டு, உங்கள் கணக்கு தொடர்பாக (KYC - Know Your Customer) "உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்" என்பதற்கான விபரங்கள் வங்கி கணணியில் update செய்யப்படாமல் உள்ளதால், உங்கள் ஏடிஎம் கார்டு வேண்டுகை செயல்படாமல் உள்ளது.  நீங்கள் உங்கள் கிளையை அணுகி உங்கள் அடையாளச் சான்று, முகவரிச்சான்று போன்றவையுடன்  KYC update request ஒன்று கொடுத்து அது கணணியில் ஏற்றப்பட்டவுடன், உங்கள் ஏடிஎம் கார்டு கோரிக்கை செயல்பட துவங்கும் என்றார்.
நீங்கள் சொல்லியபடி செய்கிறேன், ஆனால் வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர் என்ற முறையில் எனக்கு சில சந்தேகங்கள் என்றேன், கேளுங்கள் என்றார் அந்த முதுநிலை மேலாளர்.  எனது மாதாந்திர சம்பளம் வரவு வைக்கப்படும் கணக்கு இது என்பதால் தொடர்ந்து பாிமாற்றங்கள் நிகழும் கணக்கு இது, தவிர நான் மாற்று ஏடிஎம் கார்டு விண்ணப்பிக்கும் போது நிரப்பிக் கொடுத்த படிவத்துடன், எனது அடையாள மற்றும் முகவரி சான்று இணைத்து கொடுத்துள்ளேன், எனது முகவரியில் கடந்த 10 ஆண்டுகளாக மாற்றம் ஏதுமில்லை, அவ்வாறிருக்க உங்கள் கணணியில் எனது வேண்டுகை தொடர்பான பதிவினை மேற்கொள்ளும் போது முகவரியில் மாற்றமில்லை, தொடர்ந்து பரிமாற்றங்கள் இருந்து கொண்டிருக்கிறது என்ற நிலையை பார்த்து உங்கள் அலுவலரே சரிபார்த்திருக்கலாமே என்றேன்.
சார் இது ரிசர்வ் வங்கி உத்திரவின்படி ஒவ்வொரு வாடிக்கையாளரின் விபரமும் 3 ஆண்டுக்கு ஒரு முறை கணணியில் update செய்யப்பட வேண்டும் என்றார். சரி எனது வேண்டுகையை கணணியில் பதிவு செய்யும் போதே இந்த தடங்கல் உங்களுக்கு தெரிய வரும் என்றால், எனது கைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ, எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சலோ அனுப்பியிருக்கலாமே, நான் ஒவ்வொரு முறை கிளைக்கு வர வேண்டுமென்றால் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும், அல்லது அரை நாள் விடுப்பு கொடுக்க வேண்டும், தவிர அரை லிட்டர் பெட்ரோல் செலவழிக்க வேண்டும் என்றேன். அதற்கு அவர் இப்போது உங்கள் பிரச்சனை தீர கிளையை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்சிறிது நேரம் கழித்து எனது கைபேசியில் அழைத்த மற்றொரு முதுநிலை மேலாளர், நீங்கள் தல்லாகுளம் கிளையில் திரு ராஜாரூபன் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள் என்றார்.
நான் இன்று மதியம் தல்லாகுளம் கிளைக்கு சென்று திரு ராஜாரூபன் என்ற அலுவலரை தொடர்பு கொண்டபோது, எனது குறைகளை கேட்டபின், "தங்களுக்கு ஏற்பட்ட அசெளகர்யங்கள் யாரால் ஏற்பட்டிருப்பினும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், தற்போது உங்களுக்கு நான் விரைவான உதவியை மேற் கொள்ளுகிறேன்" என்றார்மீண்டும் ஒருமுறை அடையாளச் சான்று, முகவரிச்சான்று போன்றவைகளை கொடுத்து, கையோடு கணணியில் ஏற்றப்பட்டபின் ஒரு வாரத்தில் கார்டு வந்துவிடும் என தெரிவித்துள்ளார்திரு ராஜாரூபன் என்பவரின் அணுகு முறையும், பணி நடவடிக்கைகளும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது, அவருக்கு என் தனிப்பட்ட நன்றி.
இந்தப் பதிவின் நோக்கம் மேலே தெரிவித்த விபரங்கள் யாவும் வங்கி மேலாளர்கள் கண்ணில் பட்டு, அவர்களின் அடுத்து விவாதிக்கும் ஜட்டத்தில் மேற்சொன்ன சிரமங்கள் மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டுமென்கிற ஆசை மட்டுமே.
இது போன்ற சில சிரமங்களை வைத்து "தனியார் வங்கி சிறந்தது" என என் நண்பர் திரு அதியமான் போல் நான் சொல்ல மாட்டேன்அது தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொறிந்ததற்கு ஒப்பாகிவிடும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நான் எழுதி இந்த மாத "ஆழம்" மாத இதழில் அச்சாகியுள்ள "பொதுத் துறை வங்கிகளுக்கு ஆபத்தா" என்ற தலைப்பில் நாயக் கமிட்டி அறிக்கையினை தொடரும் அபாயம் குறித்த கட்டுரையின் முடிவில் "வலுவாக உள்ள வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகள் போராட்டங்களோடு நின்று விடக் கூடாதுபொது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் அன்றாட பணியின் போது அவர்களுடன் சுமுகமாக இயங்க வேண்டும்சேவையை மேம்படுத்தி நல்லுறவு வளர்த்துக் கொள்ள வேண்டும்அப்போதுதான் தனியார் மயத்திற்கெதிரான போராட்டங்களில் அவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்ள முடியும். பொது மக்களின் ஆதரவைப் பெறாமல் நடத்தப்படும் எந்தவொரு போராட்டமும் நீண்ட கால நோக்கில் வெற்றியை பெற முடியாது" என முடித்திருந்தேன்.
அதற்கேற்ப நல்லுறவு பேண விழையும் திரு ராஜாரூபன் போன்றவர்கள் இருப்பது மகிழ்வையே தருகிறது.